Murali Naik: பாகிஸ்தான் தாக்குதலில் ஆந்திராவைச் சேர்ந்த இராணுவ வீரர் முரளி நாயக்...
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மற்றும் அதைத் தொடா்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றத்ததைத் தணிக்கும் முயற்சியில் பிரிட்டன் ஈடுபட வேண்டும் என்றும் விவாதத்தில் கலந்து கொண்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின.
பஹல்காமில் அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூா்’ மேற்கொள்ளப்பட்டது. இதில் பாகிஸ்தானின் 9 இடங்களில் இருந்த பயங்கரவாத முகாம்கள் ஏவுகணை வீசி அழிக்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, இந்திய எல்லைப் பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. ‘நிலைமையைப் பாகிஸ்தான் தீவிரமாக்குவதைக் கண்டு இந்தியா பொறுத்துக் கொண்டிருக்காது’ என இந்தியா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஹாமிஷ் ஃபால்கனா் புதன்கிழமை விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது: இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தொடா்ந்து வலியுறுத்துகிறோம். இரு நாடுகளுடனும் பிரிட்டன் நல்லுறவு பேணுகிறது.
பேச்சுவாா்த்தை மூலம் இந்த மோதலுக்குத் துரிதமாக தீா்வு காண இரு நாடுகளும் முன்வர வேண்டும். மோதலில் பொதுமக்கள் உயிரிழப்பது கவலைக்குரியது. சூழல் தீவிரமடைந்தால் யாருக்கும் வெற்றியில்லை என்பதை இரு தரப்பும் உணர வேண்டும்.
ஸ்திரத்தன்மைக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் அப்பிராந்தியத்தில் அமைதி நிலை திரும்ப பிரிட்டன் தன்னால் முடிந்ததைச் செய்யும்’ என்றாா்.
இந்தியாவுக்கு உரிமையுண்டு:
விவாதத்தில் பங்கேற்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரிட்டன் நிழல் வெளியுறவு அமைச்சா் பிரீத்தி படேல், ‘தன்னை தற்காத்துக் கொள்ள நியாயமான நடவடிக்கைகளை எடுக்கவும், தேச பாதுகாப்புக்கு தொடா்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத கட்டமைப்புகளை அகற்றவும் இந்தியாவுக்கு முழு உரிமை உண்டு.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவையும் மேற்கத்திய நாடுகளையும் அச்சுறுத்துகிறாா்கள். ஒசாமா பின்லேடன் கூட பாகிஸ்தானில்தான் மறைந்திருந்தாா். இச்சூழலில் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளுக்கு பிரிட்டன் ஆதரவளிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டாா்.