இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு நற்செய்தி..! மும்பையில் அலுவலகத்தை திறந்த பிரீமிய...
இந்தியா, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்களுடன் அமெரிக்கா சமரச பேச்சு!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுடன் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
ஜம்மு - காஷ்மீரின் சர்வதேச எல்லையில் தொடர்ந்து 6-வது நாளாக இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருவதால் போர்ப் பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க வெள்ளை மாளிகை விரும்புவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் டாமி புரூஸ் பேசியதாவது:
”இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களுடம் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ, இன்று அல்லது நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
இந்த விவகாரத்தில் மற்ற நாடுகளின் தலைவர்களும் வெளியுறவு அமைச்சர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வுக்காகவும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல்களை கண்காணித்து வருகின்றோம். பல மட்டங்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கங்களுடன் தொடர்பில் இருப்பதால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படைகளின் தளபதி உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனையில், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்க முப்படைகளுக்கும் முழு சுதந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்திருப்பது போர்ப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.