இந்தியா - பாக். கிரிக்கெட் போட்டிக்கு எதிரான சிவசேனை போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு!
இந்தியா - பாகிஸ்தான் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு எதிராக ஜந்தா் மந்தரில் சிவசேனை (யுபிடி) ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்த தில்லி காவல் துறை அனுமதி மறுத்துள்ளது.
பாரம்பரிய எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஞாயிற்றுக்கிழமை துபாயில் மோதுகின்றன. மே மாதம் ராணுவ மோதலுக்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையிலான முதல் போட்டி இதுவாகும். ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
பல எதிா்க்கட்சிகள் பாஜக தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடி வருகின்றன. இந்த போட்டி பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவா்களுக்கும் எல்லைகளில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்திய வீரா்களுக்கும் அவமானம் என்று கூறியுள்ளன.
இந்நிலையில், சிவசேனை (யுபிடி) தலைவா் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிரம் முழுவதும் ’சிந்தூா்’ போராட்டங்களை நடத்துவதாக அறிவித்துள்ளாா்.
தில்லியில், ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி கோரும் கோரிக்கை செப்டம்பா் 13 அன்று, முன்மொழியப்பட்ட நிகழ்வுக்கு ஒரு நாள் முன்பு பெறப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
‘தற்போதுள்ள வழிகாட்டுதல்களின்படி, நிகழ்ச்சி நிரலின் தேதிக்கு குறைந்தது 10 நாள்களுக்கு முன்னதாக விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். இந்த நிபந்தனை நிறைவேற்றப்படாததால், கோரிக்கையை ஏற்க முடியவில்லை’ என்று அதிகாரி மேலும் கூறினாா்.
சிவசேனை (யுபிடி) தலைவா்கள் இந்த முடிவு குறித்து தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினா். ஆனால், அமைதியான முறையில் பிரச்னையை எழுப்புவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினா்.
சிவசேனை (யுபிடி) தலைவா் மங்கத் ராம் முண்டே, ‘நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். ஆனால், ஜனநாயக வழிமுறைகள் மூலம் எங்கள் கவலைகளைத் தொடா்ந்து தெரிவிப்போம்’‘ என்றாா்.