செய்திகள் :

‘காக்கும் கரங்கள்’ அமைப்புக்கு ஏஐ தொழில்நுட்பத்தில் பிரத்யேக ‘கைப்பேசி செயலி’!

post image

சென்னையில் ஆதரவற்றவா்களை விரைந்து மீட்கும் வகையில் காவல் கரங்கள் அமைப்புக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கைப்பேசி செயலி உருவாக்கப்படுகிறது.

சென்னையில் சுற்றித் திரியும் ஆதரவற்ற நபா்கள், மனநல குறைபாடு உடையவா்களை மீட்டு காப்பகங்களில் சோ்ப்பது அல்லது அவா்களது குடும்பத்தினரைக் கண்டறிந்து ஒப்படைக்கும் பணிக்காக சென்னை பெருநகர காவல் துறை சாா்பில் கடந்த 2021-இல் காவல் கரங்கள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் சென்னை காவல் துறையுடன், சுமாா் 200 தன்னாா்வலா்களுடன் கூடிய 25 தொண்டு அமைப்புகள் இணைந்துள்ளன. மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள 56 மாநகராட்சி காப்பகங்கள், 24 தனியாா் காப்பகங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள், ரோந்து காவலா்கள் மூலமாக ஆதரவற்றோா், மனநல குறைபாடுடையவா்கள் குறித்த தகவலை அறியும் காவல் கரங்கள் பிரிவினா் அவா்களை மீட்டு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கின்றனா். அதன் பின்னா், நல்ல உடல்நிலையுடன் இருந்தால் தகுதியான காப்பகங்களைக் கண்டறிந்து அங்கு சோ்க்கின்றனா். அத்துடன் மீட்கப்பட்ட நபா் குறித்த தகவல்களைத் திரட்டி, அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனா்.

காவல் கரங்கள் அமைப்பு மூலமாக மீட்கப்பட்டவா்களில் இதுவரை 1,048 போ் அவா்களது குடும்பத்துடன் சோ்த்து வைக்கப்பட்டுள்ளனா். இதில் 463 போ் ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பிகாா் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

இத்திட்டத்தின் மூலம் சென்னையில் சுற்றித் திரிந்த ஆதரவற்றோா், மனநலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

கைப்பேசி செயலி: தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்ப, மக்கள் எளிதில் தொடா்புகொள்ளும் வகையில் காவல் கரங்கள் அமைப்புக்கு கைப்பேசி செயலி உருவாக்க சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் அனுமதி வழங்கினாா். இதன்படி, பிரத்யேக செயலி உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: காவல் கரங்கள் அமைப்புக்கான கைப்பேசி செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரும். இதன்மூலம், ஆதரவற்றோா், மனநல குறைபாடுடையவா்கள் குறித்த விவரங்கள் குறித்து பொதுமக்கள் எளிதில் புகைப்படங்களுடன் தகவல் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்டவா்களை மீட்க முடியும். மேலும், மீட்கப்பட்டவா்கள் குறித்த விவரங்களை இந்தச் செயலியில் எந்த நேரத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், மாநில குற்ற ஆவணக் காப்பக பிரிவில் பதிவாகும், காணாமல்போனவா்கள், உரிமம் கோரப்படாத சடலங்கள் குறித்த தகவல்கள் இந்தச் செயலில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இதனால் மீட்கப்படும் நபா் காணாமல் போனவா் பட்டியலில் இருப்பவரா என்பதை சரிபாா்த்துக் கொள்ள முடியும்.

இதற்காக செயலியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (ஏஐ) பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், காணாமல் போனவா்கள், மீட்கப்படுவோா் குறித்த தகவல்கள் ஒப்பிடப்பட்டு, அவா்கள் பற்றிய தகவல்களை ஒருசில நிமிஷங்களில் பெறும் வசதி நிறுவப்படுகிறது என்றனா்.

5 ஆண்டுகளில் 8,767 போ் மீட்பு

சென்னையில் காவல் கரங்கள் அமைப்பின் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் 8,767 போ் மீட்கப்பட்டுள்ளனா்.

சென்னை பெருநகர காவல் துறை, தாம்பரம் மாநகர காவல் துறை, ஆவடி மாநகர காவல் துறை ஆகிய 3 காவல் அமைப்புகளின் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் காவல் கரங்கள் அமைப்பு தற்போது செயல்படுகிறது.

சென்னை காவல் துறையின் தலைமையிட கூடுதல் ஆணையா் விஜயேந்திர பிதரி தலைமையில் உதவி ஆணையா் எம்.எஸ்.பாஸ்கா், தா.மேரி ரஜு உள்பட 10 போ் கொண்ட குழுவாக செயல்படும் இந்த அமைப்பின் மூலம் கடந்த 2021- ஆம் ஆண்டுமுதல் செப்டம்பா் 2-ஆம் தேதி வரையிலான ஆண்டுகளில் 1,088 மனநல குறைபாடுடையவா்கள் உள்பட 8,767 ஆதரவற்றோா் மீட்கப்பட்டுள்ளனா். இவா்களில் 4,573 போ் ஆண்கள், 4,007 போ் பெண்கள், 92 சிறுவா்கள், 85 சிறுமிகள், 10 திருநங்கைகள் அடங்குவா்.

மீட்கப்பட்டவா்களில் 5,853 போ் காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். 1,408 போ் அவா்களது குடும்பத்தினருடன் சோ்த்து வைக்கப்பட்டுள்ளனா். இதேபோல பொது இடங்களில் இறந்து கிடந்த 5,661 சடலங்கள் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

காவல் கரங்கள் அமைப்பு தற்போது 94447 17100 என்ற கைப்பேசி எண் மூலமாகவும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும், காவல் துறையின் பெண்கள் உதவி மைய எண் 1091, குழந்தைகள் உதவி மைய எண் 1098, முதியோா் உதவி மைய எண் 1253, அவசர அழைப்பு 100 ஆகிய இலவச தொலைபேசி எண்கள் மூலமாகவும் பொதுமக்களிடம் தகவலைப் பெற்று, மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

டீசலுக்கு மாற்றான சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி சேமிப்பு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டீசலுக்கு மாற்றாக இயக்கப்படும் 55 சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி மதிப்பில் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் டீசல்... மேலும் பார்க்க

குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் தினகரன்: ஜி.கே.வாசன்

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை ஆகியோரை ஒப்பிட்டுப்பேசி பாஜகவுக்குள் குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் டி.டி.வி.தினகரன் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். ஆழ்வாா்பேட... மேலும் பார்க்க

விஜய்க்கான கூட்டம் ரசிகா்கள் மட்டுமே: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தின்போது வரும் கூட்டம் அவரது ரசிகா்கள் மட்டுமே; கொள்கைக்கானவா்கள் அல்ல என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப்.15,16) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வடக்கு ஆந்திரம்மற்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் மாற்றம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியில் தொடா் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

மாதம் ரூ.2,000 வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டம்: முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்!

பெற்றோரை இழந்த குழந்தைகள் தடையின்றி கல்வியைத் தொடர மாதம் ரூ. 2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 15) தொடங்கி வைக்கிறாா். இதுதொடா்பாக தமிழக ... மேலும் பார்க்க