Doctor Vikatan: தினமும் 3 லிட்டர் தண்ணீர் பரிந்துரை; குடித்தால் வாந்தி உணர்வு - ...
இந்தியா - ரஷியா இடையேயான உறவு அரசியலுக்கு அப்பாற்பட்டது! புதின்
இந்தியா - ரஷியா இடையேயான உறவு எந்த அரசியலுக்கும் அப்பாற்பட்டது என்று இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) இரண்டு நாள் வருடாந்திர உச்சி மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இன்று காலை உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு ரஷிய அதிபர் புதினும் பிரதமர் மோடியும் ஒரே காரில் புறப்பட்டு இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் அரங்குக்குச் சென்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது புதின் பேசியதாவது: ”பிரதமர் மோடியைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உலகளாவிய தெற்கு மற்றும் கிழக்கு மக்களை ஒன்றிணைக்கும் ஒரு அமைப்பாக எஸ்சிஓ உச்சிமாநாடு உள்ளது. இதன் ஒரு பகுதியாக நாம் சந்திப்பது பயனுள்ளதாக இருக்கும். சர்வதேச அமைப்புகளாக ஐ.நா., பிரிக்ஸ் என அனைத்திலும் ஒன்றாகக் குரல் எழுப்புகிறோம். இன்றைய சந்திப்பு நமது ஒருங்கிணைந்த பாதையை மேலும் வலுப்படுத்தும். ரஷியாவும் இந்தியாவும் நம்பகமான கூட்டாண்மையைப் பகிர்ந்து கொள்கின்றன. தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. இது எந்த அரசியலுக்கும் அப்பாற்பட்டது. மக்கள் நமது உறவை ஆதரிக்கின்றனர்” எனத் தெரிவித்தார். இதனிடையே, புதினுடனான சந்துப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள மோடி, ”வர்த்தகம், உரங்கள், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தோம்.” எனத் தெரிவித்துள்ளார்.