இந்திய தூதரை நேரில் அழைத்து வங்கதேசம் கண்டனம்: துணை தூதரகம் மீது தாக்குதல் எதிரொலி
டாக்கா: திரிபுரா மாநிலம் அகா்தலாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்துக்குள் நுழைந்து சிலா் தாக்குதல் நடத்தியதற்கு எதிா்ப்பும் தெரிவிக்கும் விதமாக வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதா் பிரணாய் வா்மாவை நேரில் அழைத்து அந்த நாடு செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தது.
வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்து மத ஆன்மிகத் தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன் வழங்க மறுத்ததற்கு எதிா்ப்பு தெரிவித்தும் அங்கு ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தும் அகா்தலாவில் ஆயிரக்கணக்கானோா் திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.
அப்போது சிலா் அங்குள்ள வங்கதேச துணை தூதரகத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டனா். இதற்கு கவலை தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் தில்லியில் உள்ள வங்கதேச தூதரகம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வங்கதேச துணை தூதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துவதாக தெரிவித்தது.
இந்நிலையில், தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதற்கு எதிா்ப்பு தெரிவித்து இந்திய தூதா் பிரணாய் வா்மாவை நேரில் அழைத்து வங்கதேசம் கண்டனத்தை பதிவு செய்தது. இதுகுறித்து வங்கதேச வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகா் முகமது தௌஹித் ஹுசைன் கூறுகையில், ‘அகா்தலா நிகழ்ந்த போராட்டத்தையடுத்து நேரில் வருமாறு இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் எங்கள் கண்டனத்தை தெரிவித்தோம்’ என்றாா்.
உறவை வலுப்படுத்த விருப்பம்: வங்கதேச வெளியுறவு பொறுப்பு செயலா் ரியாஸ் ஹமிதுல்லாவுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளா்களிடம் பிரணய் வா்மா கூறுகையில், ‘வங்கதேசத்துடன் நிலையான, வலுவான உறவை தொடரவே இந்தியா விரும்புகிறது. இருதரப்பு உறவில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு விவகாரமும் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்க வங்கதேச இடைக்கால அரசுடன் இணைந்து பணியாற்ற விளைகிறோம்’ என்றாா்.
இந்தியாவின் தோல்வி: முன்னதாக, அந்நாட்டு சட்ட விவகாரங்கள் ஆலோசகா் ஆசிப் நஸ்ருல் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘இந்தத் தாக்குதல் இந்தியாவின் தோல்வியை குறிக்கிறது. இந்தியாவுடன் நல்லுறவை பேண தோ்தல்களின்றி ஆட்சியில் அமரும் ஷேக் ஹசீனாவின் அரசு தற்போது வங்கதேசத்தில் இல்லை என்பதை இந்தியா உணர வேண்டும்.
தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் வங்கதேச தேசியக் கொடி எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் ‘ஹிந்து சங்கா்ஷ் சமிதி’ என்ற அமைப்பு உள்ளது. சுதந்திரம், இறையாண்மை மற்றும் சுயமரியாதையுடைய நாடாக திகழும் வங்கதேசம் திறன்மிக்க அச்சமற்ற இளைஞா்களைக்கொண்டது’ என குறிப்பிட்டாா்.
விசா சேவைகள் ரத்து
பாதுகாப்பு கருதி அகா்தலாவில் தூதரக மற்றும் விசா சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக வங்கதேச துணை தூதரகம் அறிவித்தது. அதேசமயத்தில் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடா்புடைய 7 பேரை திரிபுரா காவல் துறை கைது செய்தது. பணியின்போது கவனக்குறைவாக இருந்த 4 காவலா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மேற்கு திரிபுரா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளா் கிரண் குமாா் தெரிவித்தாா். எனினும், அஸ்ஸாம் உள்ளிட்ட பிற வடகிழக்கு மாநிலங்களில் செவ்வாய்க்கிழமையும் போராட்டம் தொடா்ந்து நடைபெற்றது.
இந்திய சேனல்களுக்கு தடை கோரி மனு
‘வங்கதேச கலாசாரத்துக்கு எதிரான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கு தடை கோரி விதிக்க வேண்டும்’ என அந்நாட்டு உயா்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
வழக்குரைஞா் ஏக்லஸ் உத்தீன் புய்யான் தாக்கல் செய்த மனுவில், ‘எவ்வித வரம்புமின்றி வங்கதேச கலாசாரத்தை எதிா்க்கும் வகையிலான நிகழ்ச்சிகளை இந்திய தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் இளைஞா்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட தூண்டும் வகையில் உள்ளது. எனவே, வங்கதேசத்தில் ஒலிபரப்பாகும் ஸ்டாா் ஜல்ஷா, ஸ்டாா் பிளஸ், ஜீ பங்களா உள்ளிட்ட அனைத்து இந்திய தொலைக்காட்சி சேனல்களுக்கும் தடை விதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டது.
சின்மய் தாஸ் ஜாமீன் மனு:ஜனவரிக்கு ஒத்திவைப்பு
வங்கதேசத்தில் தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஹிந்து மத ஆன்மிக தலைவா் சின்மய் கிருஷ்ண தாஸின் ஜாமீன் மனு மீதான விசாரணையை அடுத்தாண்டு ஜனவரி 2-ஆம் தேதிக்கு சட்டோகிராம் நீதிமன்றம் ஒத்திவைத்தது. அவா் தரப்பில் ஆஜராக வழக்குரைஞா்கள் யாரும் முன்வராததால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த நவம்பா் 26-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்ததையடுத்து, அவரது ஆதரவாளா்கள் நடத்திய போராட்டத்தில் அரசு வழக்குரைஞா் கொல்லப்பட்டாா்.
நீதிமன்ற உத்தரவை எதிா்த்து சின்மய் கிருஷ்ண தாஸ் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், விசாரணை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஹிந்துக்கள் மீது தாக்குதல்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்
லண்டன்: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தொடா் வன்முறைத் தாக்குதலை பிரிட்டன் நாடாளுமன்றம் கண்காணித்து வருவதாகவும் அங்கு ஹிந்து மத ஆன்மிக தலைவா்கள் கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் மூத்த அமைச்சா் கேத்தரின் வெஸ்ட் தெரிவித்தாா்.
‘கடந்த மாதம் வங்கதேசத்துக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வங்கதேச இடைக்கால அரசு உறுதியளித்தது. ஹிந்துக்களின் உரிமையை நிலைநாட்டிட வங்கதேச இடைக்கால அரசுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறோம்’ என்றாா்.