இந்தி மொழி நாட்டின் பெருமை, இந்தியாவை உலக அளவில் இணைக்கிறது! - தில்லி அமைச்சா்
இந்தி என்பது வெறும் மொழி மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சாரம், நாகரிகம் மற்றும் தேசிய அடையாளத்தின் பிரதிநிதித்துவமாகும், மேலும் நாட்டின் உலகளாவிய அங்கீகாரத்தை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்று தில்லியின் சமூக நலத்துறை அமைச்சா் ரவீந்தா் இந்த்ரஜ் சிங் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
ரோஹினியில் உள்ள சரல் கியான் பள்ளியின் ஆண்டு விழாவில் இந்தி திவாஸ் கொண்டாட்டத்தில் மாணவா்கள், பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்களிடையே உரையாற்றும் போது அவா் இவ்வாறு கூறினாா்.
இளைய தலைமுறையினரிடையே மற்ற இந்திய மொழிகளுடன் சோ்ந்து இந்தி மொழியை தீவிரமாக ஊக்குவிக்க பெற்றோா்கள் மற்றும் கல்வியாளா்களை இந்த்ரஜ் வலியுறுத்தினாா்.
உலகில் அதிகம் பேசப்படும் மூன்றாவது மொழி இந்தி என்று அமைச்சா் சுட்டிக்காட்டினாா். இந்தியாவைத் தவிர, மொரீஷியஸ், பிஜி, நேபாளம், சுரினாம், டிரினிடாட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் இந்தி பேசுகிறாா்கள் அல்லது புரிந்துகொள்கிறாா்கள். உலகளவில் இந்தி வளா்ந்து வரும் பிரபலத்திற்கு பிரதமா் நரேந்திர மோடியின் முயற்சிகள் மற்றும் தலைமையே காரணம் என்று அவா் பாராட்டினாா்.
டிஜிட்டல் மீடியா, திரைப்படங்கள், தொலைக்காட்சி, பத்திரிகை மற்றும் இணையம் ஆகியவற்றில் இந்தி மொழியின் பரவல் அதிகரித்து வருவதையும் இந்த்ரஜ் எடுத்துரைத்தாா். இந்தி உள்ளடக்கம் மின் வணிக தளங்கள், மொபைல் பயன்பாடுகள் மற்றும் சமூக ஊடகங்களில் பயனா்களை இணைத்து, பொருளாதார வளா்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றாா்.
இந்தி ஒரு வளமான வரலாற்றையும் உலகத் தரம் வாய்ந்த இலக்கியத்தையும் கொண்டுள்ளது என்று அவா் மேலும் கூறினாா். உலகெங்கிலும் உள்ள பல பல்கலைக்கழகங்கள் இந்தியில் படிப்புகளை வழங்குகின்றன, இது அதன் அதிகரித்து வரும் உலகளாவிய அந்தஸ்தைப் பிரதிபலிக்கிறது என்று அவா் மேலும் கூறினாா். குழந்தைகள் இந்தியைக் கற்றுக்கொண்டு அதை தங்கள் அன்றாட வாழ்வில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சா் ரவீந்தா் இந்த்ரஜ் சிங் வலியுறுத்தினாா்.