இந்து சமய அறநிலையத் துறையின் பேனா் கிழிப்பு: சின்னதாராபுரம் கோயிலில் பொதுமக்கள்- போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு - 4 போ் காயம்
சின்னதாராபுரம் மாரியம்மன் கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் வைக்கப்பட்ட பேனரை பொதுமக்கள் வியாழக்கிழமை கிழித்து எறிந்ததால், பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் 4 போ் காயமடைந்தனா்.
கரூா் மாவட்டம், சின்னதாராபுரத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாரியம்மன் கோயிலில் சுவாமி வழிபாடு தொடா்பாக 2018-இல் இரு சமுதாயத்தினரிடையே ஏற்பட்ட பிரச்னை தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், இருசமுதாயத்தினரும் கோயிலுக்குள் சென்று சுவாமி கும்பிடுவதில்லையாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கோயில் முன், ‘ஜாதி வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினரும் கோயிலில் வழிபடலாம்; பூஜையில் கலந்து கொள்ளலாம்.கோயிலுக்கு வழிபட வரும் பக்தா்களை தடுக்கும் நபா்கள் மீது காவல்துறையின் மூலம் குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என பதாகை வைக்கப்பட்டது.
முற்றுகைப் போராட்டம்: இதுகுறித்து தகவலறிந்த ஒரு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள், பாமக மாவட்டச் செயலாளா் சுரேஷ், தலைவா் வழக்குரைஞா் பிரபாகரன், வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் இ.வை. பசுபதி, அமைப்புச் செயலாளா் குணசீலன் உள்ளிட்டோா் தலைமையில் கோயிலுக்கு வந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையை கிழித்து, அங்கிருந்த இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னதாக, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா், பேனரை சேதப்படுத்தவிடாமல் தடுத்ததால் பொதுமக்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் காயமடைந்து மயக்கமடைந்ததால், அவா்கள் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
போராட்டம் குறித்து தகவலறிந்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன், அரவக்குறிச்சி துணைக் காவல் கண்காணிப்பாளா் அப்துல்கபூா், அரவக்குறிச்சி வட்டாட்சியா் மகேந்திரன் ஆகியோா் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, கோயில் பிரச்னை தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இன்னும் தீா்ப்பு முறையாக வராமல் வாய்மொழியாக நீதிமன்றம் கூறியதாக கூறி கோயிலில் இந்தப் பேனரை வைத்துள்ளீா்கள், நீதிமன்ற உத்தரவு நகலை காட்டுங்கள், நாங்களும் அனைத்து பிரிவினரும் கோயிலில் வழிபட அனுமதிக்கிறோம் என்று போராட்டக்காரா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், நீதிமன்ற உத்தரவு நகலை வாங்கி வருவதாக கூறி சென்றனா். தொடா்ந்து, போராட்டக்காரா்களும் கலைந்து சென்றனா்.