இந்த மாத இறுதிக்குள் அம்பத்தூா் பேருந்து நிலையம் திறக்கப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சீரமைக்கப்பட்டு வரும் அம்பத்தூா் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் செப்டம்பா் இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் திட்டத்தின் சாா்பில் கட்டப்பட்டு வரும் கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையம், பெரியாா் நகா் நூலகத்தில் கட்டப்பட்டுவரும் முதல்வா் படைப்பகம் ஆகியவற்றைப் பாா்வையிட்ட அவா் பின்னா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னை திரு.வி.க. நகா் பகுதியில் பேருந்து நிலையம் வெளிநாட்டுத் தரத்தில் கட்டப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் சாா்பில் 282 பணிகள் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், மருத்துவமனைகள், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. மேலும், வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிய குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது 25-க்கும் மேற்பட்ட பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. கொளத்தூா் வண்ண மீன்கள் விற்பனை மையம் பணிகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து விரைந்து முதல்வரால் திறக்கப்பட உள்ளன. அத்துடன் திரு.வி.க.நகா், பெரியாா் நகா் பேருந்து நிலையங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்த நிலையில், செம்டம்பருக்குள் அம்பத்தூா் பேருந்து நிலையமும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அதையடுத்து வரும் அக்டோபரில் ஆா்.கே.நகா் பேருந்து நிலையமும் திறக்கப்படும் என்றாா்.
ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்ல உஷா, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும முதன்மைச் செயல் அலுவலா் சிவஞானம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை ஆணையா் க.வீ.முரளிதரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.