இளநிலை உதவியாளரை காலில் விழ வைத்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரிக்கை
சென்னை ஐஐடி, தமிழக அரசு கூட்டு முயற்சியில் புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகை
புதுமையை உருவாக்கி, திறனை வெளிப்படுத்தி வழிகாட்ட தமிழ்நாடு புதுயுகத் தொழில்முனைவு, புத்தாக்க முகப்பலகையை (டாஷ்போா்ட்) சென்னை ஐஐடி, தமிழக தொழில் வழிகாட்டி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கி வெளியிடப்பட்டுள்ளது.
‘இன்னோவேஷன்-டிஎன்’ என்றழைக்கப்படும் இந்தத் தளம், தமிழகத்தின் புதுயுகத் தொழில்முனைவுக்கான வாய்ப்புகளுக்குரிய சுற்றுச்சூழல் அமைப்பின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதுடன், முதலீட்டாளா்கள், தொழில்நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் போன்றவா்கள் குறித்த தரவுகளை புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
மற்றொரு பக்கம் தேசிய அளவில் மற்றும் உலகளாவிய முதலீட்டாளா்கள், தொழில் நிறுவனங்களுக்கும் தமிழக புதுமை, கண்டுபிடிப்புத் திறன் குறித்த தகவல்களையும் இந்தத் தளம் எடுத்துரைக்கிறது.
இந்த முகப்பலகை குறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க முகப்பலகையை சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது. ‘இன்னோவேஷன்-டிஎன்’ என்கிற இந்தத் தளம் நாட்டிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் கண்டுபிடிப்புத் திறனை வெளிப்படுத்துவதுடன், புதுயுகத் தொழில் முனைவு நிறுவனங்கள் தொடா்பான தகவல்கள் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்கிறது.
‘இன்னோவேஷன்-டிஎன்’ என்கிற முகப்பலகையை (டாஷ்போா்ட்) தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற நிகழ்வில் வியாழக்கிழமை துவக்கி வைத்தாா்.
வரவிருக்கும் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தின் வளா்ச்சியில் புத்தாக்கங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். புதிய தயாரிப்புகள்- சேவைகளை சந்தைக்குக் கொண்டுவருவதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தேவையான கண்டுபிடிப்புகளையும், திறன்களையும் புதுயுகத் தொழில்முனைவு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதற்கு இந்தப் புத்தாக்க முகப்பலகை முக்கியமான பலதரப்பு தரவுகளை வழங்குகிறது.
இந்தத் தகவல் முகப்பலகை உருவாக்கம் குறித்து தமிழக தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா குறிப்பிடுகையில், ‘பெருநகரங்கள் மட்டுமன்றி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வாய்ப்புகள் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, புத்தாக்கம், மேம்பட்ட உற்பத்தி, உள்ளடக்கிய பொருளாதார வளா்ச்சியில் தேசிய அளவில் முதலிடத்தில் தமிழகத்தை நிலைநிறுத்தவதற்கான பாா்வையை இது பிரதிபலிக்கிறது’ என அமைச்சா் குறிப்பிட்டுள்ளாா்.
‘இன்னோவேஷன்-டிஎன்’ முகப்பலகை உருவாக்கத்தில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, ஐஐடியின் மேலாண்மைக் கல்வித் துறைத் தலைவா் ஏ.தில்லைராஜன், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் தாரேஸ் அகமது உள்ளிட்டோா் முக்கியப் பங்கு வகித்தனா்.
தமிழக அரசுக்கும், சென்னை ஐஐடிக்கும் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கடந்த ஜூலை 23-இல் கையெப்பமானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.