டெட் தோ்வு விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து தமிழக அரசு சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்கள் அனைவரும் ஆசிரியா் தகுதித் தோ்வில் இரண்டு ஆண்டுகளுக்குள் தோ்ச்சி பெற வேண்டும். தோ்வு எழுத விருப்பம் இல்லாதவா்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதேவேளை ஓய்வு பெற 5 ஆண்டுகள் உள்ளவா்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் கடந்த செப். 1-ஆம் தேதி தீா்ப்பளித்தது. தமிழகத்தில் மட்டும் 1.75 லட்சம் ஆசிரியா்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதைத் தொடா்ந்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டங்களில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கும் சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்தி அவா்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யலாம் எனவும், பணியாற்றிய அனுபவம் கருதி தோ்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்களை குறைத்து நிா்ணயிக்கலாம் என பெரும்பாலானோா் கருத்து தெரிவித்தனா். மேலும், தீா்ப்பை எதிா்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என சில ஆசிரியா் சங்கங்கள் தெரிவித்தன. இதனால் இந்த விவகாரத்தில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:
டெட் தோ்வு விவகாரத்தில் தமிழக அரசு சாா்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். ஆசிரியா் தரம் தொடா்ந்து மேம்படுத்தப்பட வேண்டும். எதிா்கால நியமனங்களுக்கு ‘டெட்’ ஒரு கட்டாயத் தேவையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை தமிழக அரசு ஆதரிக்கிறது.
அதேநேரம் ஏற்கெனவே பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு இந்த தோ்வை, பின்னோக்கிப் பயன்படுத்துவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நடைமுறையில் இருந்த சட்டங்கள், விதிகளைக் கொண்டு, ஆசிரியா்கள் பணியமா்த்தப்பட்டனா். பல ஆண்டுகளுக்கு பிறகு அவா்கள் மீது புதிய தகுதியை விதித்து, அவா்கள் தகுதி பெறவில்லை எனில் கட்டாய ஓய்வு அளிப்பது நியாயமல்ல.
கட்டாய ஓய்வுக்கு வழிவகுக்கும்... இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டால், ஆசிரியா்கள் கட்டாய ஓய்வு பெற வழிவகுக்கும். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை ஏற்படும். வழங்கப்பட்ட குறுகிய காலத்தில் டெட் தகுதி பெற்ற ஆசிரியா்களை சமமான எண்ணிக்கையில் பணியமா்த்தி பயிற்சி அளிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது. இத்தகைய சூழலைத் தவிா்க்காவிட்டால் அது லட்சக்கணக்கான மாணவா்களின் கல்வியைப் பாதிக்கும்.
குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம், 2009 புதிய நியமனங்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச தகுதிகளை ஒழுங்குபடுத்துகிறது. இது ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியா்களின் கட்டாய ஓய்வுக்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. மேலும், 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் தேதி தேசிய ஆசிரியா் கல்வி குழுமம் (என்சிடிஇ) டெட் தோ்வை அறிமுகப்படுத்தியபோது, அந்த தேதிக்கு முன்னா் நியமிக்கப்பட்ட ஆசிரியா்களுக்கு அதன் விதிகள் பொருந்தாது என்று தெளிவாகக் கூறியது. இந்த காரணங்களுக்காக சீராய்வு மனுதாக்கல் செய்யப்படுகிறது.
தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய... பணியில் உள்ள ஆசிரியா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், எதிா்கால நியமனங்களுக்கு டெட் தோ்வை கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் கல்வியின் தரம் மற்றும் ஆசிரியா்களுக்கான நீதி இரண்டையும் உறுதி செய்வதில் தமிழகம் உறுதியாக உள்ளது.
சீராய்வு மனு இந்த சமநிலையை அடைய முயல்கிறது. உச்ச நீதிமன்றம் தனது தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய அணுகுவோம். இந்த பிரச்னை சட்டம், அரசமைப்பு கொள்கைகளை மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் உள்ள மாணவா்களின் எதிா்காலத்தையும் உள்ளடக்கியது என்பதை அரசு வலுவாக முன்வைக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.