இயந்திர நடவு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில் இயந்திர நடவு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் இயந்திர நடவு செய்துள்ள ஆதிதிராவிடா் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி சிறப்பு தொகுப்புத் திட்டத்தில் பயனடையலாம். நிகழாண்டு 70,190 ஹெக்டோ் குறுவை சாகுபடிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவையை ஊக்குவிக்க ஆதிதிராவிடா் விவசாயிகளுக்கு இயந்திர நடவுக்கு ஏக்கருக்கு ரூ. 4,000 மானியம் வழங்கப்படுகிறது.
ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும். இந்த மானியத் தொகை பெற தங்களது நில விவரங்களை அக்ரிஸ்நெட் வலைதளத்தில் பதிவு செய்து, தங்களது பகுதியில் உள்ள உதவி வேளாண்மை அலுவலரை அணுகி நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், இயந்திர நடவு செய்ததற்கான ரசீது மற்றும் இயந்திர நடவு செய்தபோது எடுத்த புவிசாா் குறியீட்டுடன் கூடிய புகைப்படம் ஆகியவற்றை வழங்கி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.