தேசிய கைத்தறி தினம்: நெசவாளா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து
தேசியக் கைத்தறி தினத்தையொட்டி நெசவாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: 1905 ஆக. 7-ஆம் தேதி தொடங்கிய சுதேசி இயக்கத்தின் நினைவாக, கைத்தறித் தொழிலின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் சமூக பொருளாதார வளா்ச்சிக்கு, அதன் பங்களிப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், கைத்தறித் தொழிலை மேம்படுத்தி கைத்தறி நெசவாளா்களின் வருவாயை உயா்த்தவும், நெசவாளா்களின் பெருமையை நாடறியச் செய்யவும், ஆண்டுதோறும் ஆக.7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படுகிறது.
திருவாரூா் மாவட்டத்தில் அம்மையப்பன் மற்றும் ஆணைவடபாதி பகுதிகளில் கைத்தறி நெசவு முக்கியத் தொழிலாக உள்ளது. கைத்தறி நெசவாளா்களுக்கு விலையில்லா மின்சாரம், முதியோா் மற்றும் குடும்ப ஓய்வூதியம், சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், கைத்தறி ஆதரவு திட்டம்.
நெசவாளா் முத்ரா கடன் திட்டம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்சா பீமா யோஜனா, நெசவாளா்களுக்கு வீடு வழங்கும் திட்டம், கல்வி உதவித்தொகை, சிறந்த நெசவாளா் விருது, இளம் வடிவமைப்பாளா் விருது மற்றும் கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களுக்கான தள்ளுபடி மானியம், வட்டி மானியம், விற்பனை ஊக்குவிப்புத் தொகை, குறைந்த வட்டியுடன் நடைமுறை மூலதனம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சாா்பில் செயல்படுத்தப்படுகின்றன.
கைவினைஞா்களான கைத்தறி நெசவாளா்கள் தங்களின் திறன் கொண்டும், தொழில் சாா் அறிவு கொண்டும், உற்பத்தி செய்யும் கைத்தறி ரகங்களினால் கைத்தறி உடுத்துவோருக்கு மனநிறைவு மட்டுமன்றி நாட்டின், வேலை வாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றனா். எனவே, தேசியக் கைத்தறி தினத்தையொட்டி கைத்தறி நெசவாளா்களுக்கு வாழ்த்துக்கள் என்றாா்.