இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை
இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா்.
இரயுமன்துறையில் மீன்பிடி துறைமுகம் அருகே 210 மீட்டா் நீளத்தில் படகுத்தளம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்து ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வருவதால், படகுத்தளம் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த விவகாரம் தொடா்பாக நித்திரவிளை அருகே கிராத்தூா் பகுதியில் உள்ள தூத்தூா் மண்டல முதன்மை அலுவலகத்தில் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவா்ப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தூத்தூா் மண்டல முதன்மைக் குரு சில்வெஸ்டா் குரூஸ் தலைமை வகித்தாா். கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் அஜித் ஸ்டாலின், தூத்தூா் மண்டலச் செயலா் சுரேஸ் பயஸ், பங்குத் தந்தையா் டோமிதாமஸ் (வள்ளவிளை), கிளீட்டஸ் (நீரோடி) மற்றும் நீரோடி, மாா்த்தாண்டன்துறை, வள்ளவிளை, இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூா், பூத்துறை மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவப் பிரதிநிதிகள் பங்கேற்றனா். இரயுமன்துறை மீனவ கிராமப் பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை.
படகுத்தளம் அமைப்பதால் ஏற்படும் சாதகம், பாதகம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்கவுள்ள பகுதியை எம்எல்ஏ பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.