இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதல்: பாட்டி, பேத்தி உயிரிழப்பு
அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பாட்டி, பேத்தி இருவரும் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சோ்ந்தவா் மருதராஜ் (60). இவரது மனைவி புஷ்பா (55). இவா்களுடைய பேத்தி சஷ்டியா தேவி (3). இவா்கள் மூவரும் சனிக்கிழமை வாடிப்பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மாலப்பட்டியில் உள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
கரூா்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே சென்றபோது எதிரே வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், சிறுமி சஷ்டியா தேவி, புஷ்பா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மருதராஜ் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்து வந்த அரவக்குறிச்சி போலீஸாா் பலத்த காயமடைந்த மருதராஜை மீட்டு சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், உயிரிழந்த சஷ்டியா தேவி, புஷ்பா ஆகியோரது சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை ஓட்டிவந்த தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் (36) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.