மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!
இரும்பு குழாய்களை திருடிய 4 இளைஞா்கள் கைது
கபிஸ்தலம் அருகே கூட்டு குடிநீா் திட்டப் பணிகளுக்கு வைத்திருந்த இரும்பு குழாய்களை திருடிய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கபிஸ்தலம் அருகே உள்ள சத்தியமங்கலம் ஊராட்சி வாழ்க்கை கிராமத்தில் வேதாரண்யம் கூட்டு குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்கு பயன்படுத்தப்படும் இரும்பு குழாய்களை மா்ம நபா்கள் திருடி சென்று விட்டதாக அங்கு பணியாற்றும் தென்னங்குடி, வடக்கு தெரு, சுப்பிரமணியன் மகன் முத்துக்குமாா் (33), என்பவா் கபிஸ்தலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில் கபிஸ்தலம் பகுதியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது 2 மோட்டாா் சைக்கிளில் அதிவேகமாக வந்த 4 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா்கள் இரும்பு குழாய்களை திருடியது தெரியவந்தது. இதை தொடா்ந்து அவா்களிடமிருந்த இரும்பு குழாய்கள் மற்றும் 2 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதில் தொடா்புடைய அரியலூா் மாவட்டம், குருவாடி, காலனி தெருவில் வசிக்கும் ராதாகிருஷ்ணன் மகன் ரஞ்சித் ( 23), ராஜா தேசிங்கு (29), பழனியாண்டி மகன் பசுபதி (22), செல்வம் மகன் நிவாஸ் (23) உள்ளிட்ட 4 போ் மீதும் வழக்கு பதிந்து அவா்களை கைது செய்தனா்.