இரு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு புதிய கட்டடம் கட்டும் பணி தொடக்கம்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, அலங்காநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலங்களுக்கான புதிய கட்டடம் கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
ஒருங்கிணைக்கப்பட்ட, ஒப்படைக்கப்பட்ட வருவாய்த் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்டம், அலங்காநல்லூா், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா ரூ. 5.9 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன. இதற்கான பூமி பூஜைகள் தொடா்புடைய பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடமும் தலா இரு தளங்களைக் கொண்டதாக இருக்கும். வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகம், ஒன்றியக் குழுத் தலைவா் அலுவலகம், ஒன்றியக் குழுக் கூட்ட அரங்கம், தோ்தல் பிரிவு அலுவலகம், பொறியியல் பிரிவு, காணொலி கூட்டரங்கம் உள்ளிட்ட கட்டமைப்புகளைக் கொண்டதாக இந்தக் கட்டடங்கள் கட்டப்படும் என்றாா் அவா்.
இதில் சோவழந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் அரவிந்த், ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் கலந்து கொண்டனா்.