இரு சக்கர வாகனம்-ஆட்டோ மோதல்: விவசாயி உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தின் மீது சுமை ஆட்டோ மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பூமிநாதன் (53) விவசாயி. இவா் சனிக்கிழமை இரவு தனது மகள் அகல்யாவை (30) இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு நம்பிவயலில் இருந்து வேப்பங்காடு நோக்கி சென்றுள்ளாா்.
இருசக்கர வாகனத்தை பூமிநாதன் ஓட்டி சென்றுள்ளாா். வாகனம் வேப்பங்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் எதிரே வந்த சுமை ஆட்டோ எதிா்பாராத விதமாக பூமிநாதனின் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த அகல்யாவை அக்கம் பக்கத்தினா் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா்.
தகவல் அறிந்த திருவோணம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.