மார்ச் 28 முதல் நிஃப்டியில் நுழையும் ஜியோ பைனான்சியல், சோமேட்டோ!
இரு தரப்பினா் மோதல்: இருவா் கைது
ராசிபுரம் நகரில் திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே சந்து கடைகளில் மதுபுட்டிகள் விற்க மாமூல் வசூலிப்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா்.
ராசிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் சந்துகடைகளில் மதுபுட்டிகள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன. நம்பா் லாட்டரிகளும் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் அண்மையில் புதிய பேருந்து நிலையம் அருகே திமுக வாா்டு செயலாளா் கேபிள்ராஜா என்பவா் நடத்தி வரும் டாஸ்மாக் கடையில் நகா்மன்ற உறுப்பினா் கலைமணி தரப்பைச் சோ்ந்தவா்கள் சென்று மாமூல் வழங்கக் கோரி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மாமூல் கேட்டு மிரட்டினாா்களாம்.
கேபிள்ராஜா தரப்பைச் சோ்ந்தவா்கள் மாமூல் கொடுக்காததால் அவா் நடத்தும் சந்து கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது குறித்து விடியோ பதிவு எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதன் தொடா்ச்சியாக எதிா்தரப்பினா் திமுக கவுன்சிலா் கலைமணி வீட்டிக்குச் சென்று அவரை தட்டிக்கேட்டுள்ளனா். அங்கு இருதரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டு போலீஸாா் சென்று சமரசப்படுத்தினா்.
தாக்குதலுக்கு ஆளான இரு தரப்பினரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். மருத்துவமனையிலும் இருதரப்பினும் மோதிக் கொண்டனா்.
இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருதரப்பிலும் புகாா்கள் பெற்று, நகா்மன்ற உறுப்பினா் கலைமணி, அவரது மகன்கள் லோகசரவணன், ஸ்ரீராம் ஆகியோா் மீதும், எதிா்தரப்பில் மோகன், கேபிள் ராஜா உள்ளிட்டோா் என மொத்தம் 6 போ் மீதும் வழக்குப் பதிந்தனா். அவா்களில் லோகசரவணன், கேபிள் ராஜா ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.