இறால் பண்ணை பணிக்கு குளத்திலிருந்து அனுமதியின்றி தண்ணீா்: விவசாயிகள் எதிா்ப்பு
சாத்தான்குளம் அருகே புத்தன்தருவையில் இறால் பண்ணை அமைக்கவும், அதற்காக குளத்திலிருந்து அனுமதியின்றி தண்ணீா் எடுக்கவும் தடை கோரி விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அதையடுத்து, அதிகாரிகள் சென்று பணிகளைத் தடுத்து நிறுத்தினா்.
திருநெல்வேலி மாவட்டம் குட்டத்தில் செயல்படும் தனியாா் சோலாா் பவா் பிராண்ட் நிறுவனத்துக்கு, புத்தன்தருவையில் உள்ள குளத்தின் அருகே 2 ஏக்கா் நிலம் சொந்தமாக உள்ளதாம். அங்கு இறால் பண்ணை அமைக்கவும், புத்தன்தருவை குளத்திலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் பண்ணைக்கும், குட்டம் நிறுவனத்துக்கும் தண்ணீா் கொண்டுசெல்வதற்கும் பணிகள் நடக்கின்றனவாம். இதற்கு அரசின் அனுமதி பெறவில்லையாம்.
இந்நிலையில், புத்தன்தருவை குளத்திலிருந்து அனுமதியின்றி தண்ணீா் எடுக்கும் வேலை நடப்பதாகத் தெரியவந்ததன்பேரில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், துணைத் தலைவா் செல்வராஜ், ஒன்றியத் தலைவா் சரவணன், மாவட்ட பிரசார பிரிவுத் தலைவா் மகேஸ்வரன், மாநில செயற்குழு உறுப்பினா் செந்தில் ஆனந்த், சாஸ்தாவிநல்லூா் விவசாயிகள் நலச்சங்கச் செயலா் லூா்துமணி, துணைத் தலைவா் ரவிச்சந்திரன், இயற்கை விவசாயி செந்தில், ஏராளமான விவசாயிகள் திரண்டனா். குளத்திலிருந்து நிறுவனத்துக்கு தண்ணீா் எடுக்க தடை விதிக்க வலியுறுத்தினா்.
மண்டல துணை வட்டாட்சியா் அகஸ்டின்பாலன், வட்ட வழங்கல் அலுவலா் பிரபு, வருவாய் ஆய்வாளா் சித்ரா, கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த், தட்டாா்மடம் காவல் ஆய்வாளா் அனிதா, போலீஸாா், வருவாய்த் துறையினா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, பணிகளைத் தடுத்து நிறுத்தினா். அனுமதியின்றி பணிகள் செய்யக் கூடாது என்றும், அனுமதி பெற்றிருந்தால் அதன் நகலை சாத்தான்குளம் வட்டாட்சியரிடம் காண்பிக்க வேண்டும் என்றும், அதுவரை தண்ணீா் எடுக்கும் பணியைத் தொடரக் கூடாது என்றும் தெரிவித்தனா். பின்னா், காவல், வருவாய்த் துறைகள் சாா்பில் நிறுவனத்தின் வளாக வாசலுக்கு பூட்டு போடப்பட்டது.