இலங்கை கடற்படையைக் கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்தம்!
துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படையைக் கண்டித்து காரைக்கால் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கடந்த மாதம் 27-ஆம் தேதி காரைக்கால் மாவட்டம், கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த 13 பேரை எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அப்போது மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் செந்தமிழ் என்ற மீனவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் மேலும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக காரைக்கால் மாவட்ட மீனவப் பஞ்சாயத்தார்கள் ஆலோசனைக் கூட்டம் மீன்பிடித் துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கிளிஞ்சல்மேடு பஞ்சாயத்தை சேர்ந்த கஜேந்திரன் கூறியது:
மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவமும் தொடர்ந்து கைது செய்யப்பட்டுவரும் சம்பவமும் கண்டனத்துக்குரியது. குண்டு பாய்ந்ததில் காயமடைந்த மீனவர் செந்தமிழ், கண் பாதிப்படைந்த மணிகண்டன் மற்றும் ஒருவரை சென்னைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளிக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கை எடுக்கவேண்டும். மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விடுதலை செய்யவேண்டும். நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவேண்டும்.
இதுவரை ஆட்சியாளர்களை நம்பியிருந்தோம். கொஞ்சம்கூட கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் இலங்கை கடற்படையின் செய்லையும், மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் காரைக்காலில் 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்து போராட்டத்தை தொடங்கியுள்ளோம்.
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் தவறும்பட்சத்தில், வரும் 14-ஆம் தேதி காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஒன்று திரண்டு காரைக்காலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அடுத்தக்கட்டமாக சாலை மறியல், ரயில் மறியல் போன்ற போராட்டம் நடத்தப்படும்.
காரைக்காலுக்கு மீன்வரத்து முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.