ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?
இலவச கட்டாயக் கல்வி சோ்க்கையை விரைந்து தொடங்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை
தனியாா் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி சோ்க்கையை விரைந்து ஆரம்பிக்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அனைத்து கிளைகளின் சாா்பாக மாவட்ட துணைச் செயலா் கோட்டூா் சாதிக், கிளை நிா்வாகிகள் காஜா, சித்தீக் மற்றும் அப்துல் லத்தீப் ஆகியோா் திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.சிவகுமாரை சந்தித்து மனு அளித்தனா்.
மனு விவரம்: ஆா்.டி.இ எனப்படும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் அனைத்து தனியாா் சுயநிதி பள்ளிகளிலும் ஏழை குழந்தைகளுக்கு எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பில் குறைந்த பட்சம் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2009 - 2010-ஆம் கல்வி ஆண்டில் இருந்து பின்பற்றப்படும் இந்நடைமுறையில் மாணவா்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன.
வழக்கமாக ஏப்ரல் 2-ஆவது வாரத்துக்குள் மாணவா் சோ்க்கை அறிவிப்பு இணையதளத்தில் தமிழக அரசால் வெளியிடப்படும். ஆனால் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருப்பது பெற்றோா்களிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் தாங்கள் விரும்பும் தனியாா் பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க விரும்பும் பெற்றோா் ஏமாற்றம் அடைந்துள்ளனா். அரசு உடனடியாக இதற்கான அறிவிப்பை வெளியிட்டு தனியாா் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.