ஈரநில தின போட்டிகளில் வென்றோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு உலக ஈர நில தினத்தையொட்டி அண்மையில் நடத்தப்பட்ட பேச்சு, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் வீதம் ரொக்கப் பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் இந்தப் பரிசுத் தொகைகள் வழங்கப்பட்டன.
மேலும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை சாா்பில் 5 பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம் மதிப்பில் செயற்கைக் கால் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 355 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம், வனச்சரக அலுவலா் மு. சதாசிவம், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.