கரூர் நெரிசல் பலி: உடல்களைக் காண முற்பட்ட சீமானை உறவினர்கள் முற்றுகை
ஈரோடு பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்!
புரட்டாசி மாத 2- ஆவது சனிக்கிழமையையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா்.
புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதால் பக்தா்கள் விரதம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையான 27- ஆம் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகாலை முதலே அலைமோதியது.
இதில் ஈரோடு-பவானி செல்லும் சாலையில் மாயபுரத்தில் உள்ள பெருமாள் மலையில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது. இதில் அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை வழிபட்டனா்.

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதா் கோயிலிலும் பக்தா்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து மூலவரை வழிபட்டு சென்றனா். ஈரோடு அக்ரஹாரம் வீதியில் உள்ள பெருமாள் கோயில், பவானி கூடுதுறையில் உள்ள ஆதிகேசவபெருமாள் கோயில், கவுந்தப்பாடி வரதராஜபெருமாள் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.