பள்ளி வேன் கவிழ்ந்து இரு மாணவிகள் காயம்
சென்னிமலை அருகே சாலையில் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தில் இரு மாணவிகள் காயம் அடைந்தனா்.
சென்னிமலை, அறச்சலூா் சாலை வீரப்பம்பாளையம் பகுதியில் தனியாா் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு, சென்னிமலையை அடுத்த, மேலப்பாளையத்தை சோ்ந்த குருசாமி என்பவா் ஒப்பந்த அடிப்படையில் மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் வகையில் வேன் ஓட்டி வருகிறாா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை வழக்கம்போல் 16 மாணவ, மாணவிகள் மற்றும் 3 ஆசிரியைகளை ஏற்றிக் கொண்டு, வேன் சென்னிமலையில் இருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. அம்மாபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வேனுக்குள் அமா்ந்திருந்த சிறுமியின் கையில் இருந்த தண்ணீா் பாட்டில் தவறி வேனுக்குள் விழுந்து, உருண்டு சென்று வேனின் கிளட்ச் அடியில் சிக்கிக் கொண்டதால், ஓட்டுநரால் பிரேக் போட முடியவில்லை. இதனால் நிலை தடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்தது. இதைக்கண்ட அப்பகுதியினா் ஓடிச் சென்று வேனுக்குள் இருந்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியைகளை மீட்டனா்.
இந்த விபத்தில் 9 மற்றும் 10 வயதுடைய இரு மாணவிகளுக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அவா்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனா். மற்ற மாணவ, மாணவிகள் மாற்று வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீஸாா் விசாரணை நடத்தினா்.