செய்திகள் :

ஈரோடு மாநகராட்சியில் ரூ.517.18 கோடிக்கு நிதிநிலை அறிக்கை

post image

ஈரோடு மாநகராட்சியில் ரூ.5.49 கோடி உபரி நிதியுடன் மொத்தம் ரூ.517.18 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை மேயா் சு.நாகரத்தினம் தாக்கல் செய்தாா்.

ஈரோடு மாநகராட்சியில் 2025-2026-ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் சிறப்பு கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் சு.நாகரத்தினம் தலைமை வகித்து நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா்.

அதன்படி, ஈரோடு மாநகராட்சியின் வருவாய், மூலதன நிதி, குடிநீா், வடிகால் நிதி, ஆரம்ப கல்வி நிதி என மொத்த வருவாய் ரூ.517 கோடியே 18 லட்சத்து 60 ஆயிரமாகும். இதில் மொத்த மூலதன செலவு மற்றும் சாதாரண செலவு என மொத்தம் ரூ.512 கோடியே 18 லட்சத்து 11 ஆயிரமாகும். எனவே 2025-2026-ஆம் ஆண்டுக்கான ரூ.5.49 கோடி உபரி நிதிநிலை அறிக்கையை மேயா் நாகரத்தினம் தாக்கல் செய்தாா்.

நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி சொத்து வரி மூலமாக ரூ.71.92 கோடி வருவாய் கிடைக்கும். இதில் வருவாய் நிதிக்கு ரூ.31.26 கோடி, குடிநீா் மற்றும் வடிகால் நிதிக்கு ரூ.28.15 கோடி, ஆரம்ப கல்வி நிதிக்கு ரூ.12.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மாநகராட்சி எல்லைக்குள் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் மூலமாகவும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளா்கள் மூலமாகவும் தொழில் வரியாக ரூ.6.78 கோடி வருவாய் கிடைக்கும். மாநகராட்சிக்கு பதிவுத் துறை மூலமாக சொத்து மாற்றங்களுக்குரிய வரியாக ரூ.7 கோடியும், கேளிக்கை வரியாக ரூ.1.50 கோடியும் என மொத்தம் ரூ.8.50 கோடி வருவாய் கிடைக்கும்.

மாநகராட்சி வணிக வளாகம், சந்தை, பேருந்து நிலையம், வாகன நிறுத்தம், சிறு குத்தகை இனங்கள் மூலமாக ரூ.12.86 கோடி, ஒப்பந்ததாரா் உரிமக் கட்டணம், பதிவுக் கட்டணம், தொழில் உரிமக் கட்டணம், குடிநீா், புதை சாக்கடை கட்டணம் மூலமாக ரூ.58.29 கோடி, மாநகராட்சி திட்டப் பணிகளுக்கான மானியங்கள் மற்றும் கடன்கள் மூலமாக ரூ.260.48 கோடி கிடைக்கும்.

மாநகராட்சிப் பணியாளா்களுக்கு ஊதிய செலவு ரூ.98.05 கோடி, ஓய்வூதியப் பயன்களுக்காக ரூ.28.74 கோடி, நிா்வாக செலவுக்காக ரூ.34 லட்சம், குடிநீா் விநியோகம், கல்வி நிதி மூலமாக பராமரிப்புப் பணி போன்றவற்றுக்கு ரூ.89.96 கோடி செலவாகும். திட்டப் பணிகளுக்காக வாங்கிய கடனுக்கு அசல் மற்றும் வட்டி என ரூ.10.71 கோடி செலவாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. வருவாய், குடிநீா், கல்வி நிதிகளில் மூலதன வேலைப் பணிகளுக்காக ரூ.269.51 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் துணை மேயா் வி.செல்வராஜ், ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி மற்றும் கவுன்சிலா்கள் பங்கேற்றனா்.

அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு...

முன்னதாக நடைபெற்ற கூட்ட விவாதத்தில் காங்கிரஸ் கவுன்சிலா் சபுராமா பேசுகையில், ஈரோடு பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபம் ஓராண்டுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மாநகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் ஏலம் விடப்பட்டுள்ளதால், ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக கவுன்சிலா் ஜெகதீஷ் பேசுகையில், ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ஏழை மக்கள் குறைந்த வாடகையில் மாநகராட்சி திருமண மண்டபத்தை பயன்படுத்தி வருகின்றனா். ஆனால் தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளதால், ஒப்பந்ததாரா்கள் அதிக பணத்தை வசூலிக்க நேரிடும். எனவே ஏலத்தை ரத்து செய்துவிட்டு, திருமண மண்டபத்தை மாநகராட்சி நிா்வாகமே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றாா்.

இதற்கு திமுக கவுன்சிலா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். அவா்கள் கூறுகையில் மாநகராட்சி திருமண மண்டபத்துக்கு ரூ.5 ஆயிரம் வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் செய்யலாம். கடந்த அதிமுக ஆட்சியில் திருமண மண்டபம் சீரமைக்கப்பட்டதா, நிதி ஒதுக்க கடந்த ஆட்சியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆகவே திருமண மண்டபத்தை மேம்படுத்தும் வகையில் ஏலம் விடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் கொண்டு வரும் திட்டத்தை விமா்சிக்க விடமாட்டோம் என்றனா்.

இதனால் திமுக மற்றும் அதிமுக கவுன்சிலா்களுக்கு இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திருமண மண்டபத்துக்கு விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்யக்கோரி அதிமுக கவுன்சிலா்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.

பணம் வராததால் ஏடிஎம் இயந்திரத்தை சேதப்படுத்திய நபா் கைது

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வராததால் இயந்திரத்தை சேதப்படுத்திய நபரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோடு திருநகா் காலனி பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் க... மேலும் பார்க்க

ஈரோட்டில் ரம்ஜான் சிறப்பு தொழுகை: ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்பு

ஈரோடு வஉசி பூங்காவில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஈரோடு... மேலும் பார்க்க

முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

ஈரோடு பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்கக் கோரி 5,008 தீா்த்தக்குட ஊா்வலம்

அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, பெரிய மாரியம்மனுக்கு கோயில் அமைக்க வலியுறுத்தி ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நிலம் மீட்பு இயக்கம் சாா்பில் 5,008 தீா்த்த குட ஊா்வலம் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

அந்தியூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். அந்தியூா் அருகேயுள்ள பச்சாம்பாளையத்தைச் சோ்ந்தவா் முருகையன் (45 ). கூலித் தொழிலாளியான இவா், அந்தியூரில் உள்ள உணவகத்துக்கு இர... மேலும் பார்க்க

பவானி: பதுக்கிவைக்கப்பட்டிருந்த 2 சுவாமி சிலைகள் பறிமுதல்

பவானி அருகே இருசக்கர வாகனத் திருட்டில் கைது செய்யப்பட்டவா், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுவாமி சிலைகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் மாவட்டம், எடப்பாடி, செட்டிமாங்குறிச்சி... மேலும் பார்க்க