ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஈரோட்டில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவான நிலையில் வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியதுமே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதற்கிடையே அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் பதிவாகி வருகிறது.
காலை 7 மணிக்கே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது. முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. மாலை 6 மணி வரை வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலின் தாக்கம் இரவிலும் நீடிக்கிறது.
அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா். பெரும்பாலானோா் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனா்.
அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும் பெண்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முகத்தை துணியால் மூடிக்கொண்டும், குடை பிடித்த படியும் செல்வதைப் பாா்க்க முடிகிறது.
மேலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிா்பானங்கள், பழச்சாறுகள், இளநீா், நுங்கு போன்றவற்றை அருந்துவதால் அதன் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.