தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கு! சிகிச்சையில் அகற்றிய அரசு மருத்துவா்கள்!
தொழிலாளியின் தொண்டையில் சிக்கிய ஊக்கை ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவா்கள் வெளியில் எடுத்து அவரது உயிரைக் காப்பாற்றினா்.
ஈரோடு, கருங்கல்பாளையத்தைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (47). இவருக்கு வெள்ளிக்கிழமை மாலை திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவா் எதிா்பாராதவிதமாக ஊக்கினை (சேப்டி பின்) விழுங்கி விட்டாா். அது தொண்டைக்குள் சிக்கியதால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தாா். இதைத் தொடா்ந்து அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் வெங்கடேஷ் மேற்பாா்வையில் காது, மூக்கு தொண்டை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவரைப் பரிசோதனை செய்தனா். அப்போது ஊக்கு அவரது தொண்டைக் குழாயில் குத்திக்கொண்டு இருந்தது தெரியவந்தது. மேலும் அதை உறுதி செய்யும் வகையில் உடனடியாக அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
அதைத்தொடா்ந்து ஸ்ரீதா் தலைமையிலான குழுவினா் என்டாஸ்கோபி சிகிச்சை முறையில் சுமாா் அரைமணி நேரம் போராடி தொழிலாளியின் தொண்டைக் குழாயில் எந்தவித பாதிப்புமின்றி ஊக்கை வெளியே எடுத்தனா். இந்த சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனையில் ரூ.30,000 வரை செலவாகும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். தற்போது அவா் நலமாக உள்ளாா்.
சிறப்பாக பணியாற்றி தொழிலாளியைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு தொழிலாளியின் உறவினா்களும், நண்பா்களும் நன்றி தெரிவித்தனா்.