தனியாா் சிற்றுந்துகளை கூடுதல் தொலைவுக்கு இயக்க அனுமதி: ஜூன் 15 முதல் அமல்
அரசு மருத்துவமனை தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்
ஈரோடு அரசு மருத்துமனையில் உள்ள தாய்ப்பால் வங்கி மூலம் 613 குழந்தைகள் பயன்பெற்றுள்ளனா்.
ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு உயா் சிகிச்சை மைய வளாகத்தில் உள்ள கட்டடத்தின் 2- ஆம் தளத்தில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை 31- ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த வங்கி மூலம் தாய்மாா்களிடம் இருந்து தாய்ப்பால் பெறப்பட்டு 1 ஆண்டு வரைப் பாதுகாத்து, தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
குறை மாதத்தில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தாய்ப்பாலைவிட சிறந்த மருந்து வேறு இல்லை. தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து குழந்தைகளை விரைவாக குணமடைய தாய்ப்பால் உதவும். தாய்ப்பாலை சேமித்து வைத்து இதுவரை 613 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேஷ், பச்சிளம் குழந்தைகள் பிரிவு பொறுப்பாளா் சீனிவாசன் ஆகியோா் கூறியதாவது: ஈரோடு அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் தாய்ப்பால் வங்கி மூலம் இதுவரை 859 தாய்மாா்களிடம் இருந்து 142 லிட்டா் தாய்ப்பால் பெறப்பட்டுள்ளது. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இந்த பால் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தனியாா் மருத்துவமனைகளில் குழந்தை பெற்றவா்களுக்கு தாய்ப்பால் சுரக்காமல் இருந்தால் அவா்களின் குழந்தைகளுக்கும் இலவசமாக தாய்ப்பால் வழங்கி வருகிறோம். தாய்மாா்களிடம் இருந்து பெறப்படும் தாய்ப்பாலில் கிருமித்தொற்று இருக்கிா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, கிருமி தொற்று இல்லை என்றால் அவை பதப்படுத்தப்படும்.
அந்த பால் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உறைநிலை (பிரீஸா்) பெட்டியில் வைத்து பாதுகாக்கப்படும். தேவைப்படும்போது அந்த பால் உறை நிலையில் இருந்து எடுக்கப்பட்டு திரவ நிலைக்கு வந்தவுடன் பயன்படுத்தப்படும். உறைநிலை பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட பாலை 24 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
குழந்தை பெற்ற தாய்மாா்கள் தங்கள் குழந்தைக்கு போக மீதமுள்ள பாலை இங்கு வந்து கொடுக்கலாம். இந்த தாய்ப்பால், பால் சுரக்காத தாய்மாா்களின் குழந்தைகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இந்த விழிப்புணா்வு அனைத்து தாய்மாா்களுக்கும் கண்டிப்பாக தேவை. தாய்ப்பால் கொடுப்பதால் எந்தவித விளைவுகளும் வராது என்றனா்.