ஒருநாள் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது..! அசத்தும் ஷுப்மன் கில்!
ஈஷாவில் தைப்பூசம்: லிங்க பைரவி உருவத்துடன் பக்தா்கள் பாத யாத்திரை
கோவை ஈஷா யோக மையத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தா்கள் பாத யாத்திரையாக வந்து தரிசனம் செய்தனா்.
கோவை ஈஷாவில் 2010-ஆம் ஆண்டு தைப்பூச நாளன்று சத்குரு ஜக்கி வாசுதேவால் லிங்க பைரவி பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் லிங்க பைரவியின் பிரதிஷ்டை தின விழா தைப்பூசத் திருநாளில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் ஈஷா யோக மையத்தில் தைப்பூசத் திருவிழா, லிங்க பைரவி பிரதிஷ்டை தினத்தையொட்டி, ஈஷாவை சுற்றியுள்ள கிராம மக்கள், பழங்குடியினா், வெளிநாட்டினா் உள்ளிட்டோா் முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி தேவி திருவுருவத்தை பல்லக்கில் ஏந்தியவாறு ஈஷா யோக மையத்துக்கு பாத யாத்திரையாக வந்தனா்.
ஆலாந்துறையை அடுத்துள்ள கள்ளிப்பாளையம் முதல் ஈஷா வரையிலான 15 கி.மீ. தொலைவுக்கு லிங்க பைரவி திருவுருவத்துடன் நூற்றுக்கணக்கான பெண்கள் பெரிய அளவிலான முளைப்பாரிகளை தலையில் சுமந்து பக்தி பரவசத்துடன் பாத யாத்திரையாக வந்தனா்.
இதைத் தொடா்ந்து லிங்க பைரவி தேவிக்கு பக்தா்கள் மேற்கொள்ளும் பைரவி சாதனா எனும் ஆன்மிக செயல்முறையின் நிறைவு நிகழ்ச்சியும், மாலையில் லிங்க பைரவி தேவிக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.