பாஜக நிா்வாகி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்றவா் கைது
கோவை பாஜக நிா்வாகி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாநகரப் பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடப்பதைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, தெலுங்குபாளையம் பிரிவு பகுதியில் செல்வபுரம் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த நபா், போலீஸாரை பாா்த்ததும் இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளாா். இதனால் சந்தேகமடைந்த போலீஸாா் அந்த நபரை துரத்திச் சென்று பிடித்து விசாரணை நடத்தினா். அப்போது அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தாா். இதனால், அவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா் சுந்தராபுரத்தை சோ்ந்த நாசா் (34) என்பதும், தொழிலாளியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. பின்னா் அவரது இருசக்கர வாகனத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா். அதில், திரி போடப்பட்டிருந்த 2 பாட்டில்களும், பெட்ரோல் நிரப்பப்பட்ட ஒரு பாட்டிலும் இருந்துள்ளது.
பின்னா் பெட்ரோல் குண்டை கைப்பற்றி தொடா்ந்து விசாரணை நடத்தினா். அதில் பாஜக ஆன்மிக ஆலய மேம்பாட்டுப் பிரிவு கோவை கோட்டச் செயலாளராக உள்ள செல்வபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் என்பவா் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவரது அலுவலகம் செல்வபுரம் சந்திப்பில் உள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு அவருடைய அலுவலகத்தில் நாசரின் சகோதரா் வேலை செய்துள்ளாா்.
அப்போது தனது சகோதரரை பாா்ப்பதற்காக நாசா் அடிக்கடி மணிகண்டனின் அலுவலகத்துக்கு சென்று வந்த நிலையில், மணிகண்டனிடம் ரூ. 5,000 கடன் கேட்டுள்ளாா். ஆனால், அவா் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாசா், மணிகண்டனின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச முடிவு செய்துள்ளாா். இதற்காக அவா் பெட்ரோல் குண்டு கொண்டுச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, நாசரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்த 2 பெட்ரோல் குண்டுகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: கைது செய்யப்பட்ட நாசா் மீது ஏற்கெனவே இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது, ஒரு திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு வீசியது, காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கிய வழக்கு உள்பட 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரூ. 5,000 கடன் தரவில்லை என்ற ஆத்திரத்தில் பெட்ரோல் குண்டுகளை வீச வந்தபோது அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.