பெண் கல்வி குறித்த வெண்கலச் சிலை
கோவை ஆட்சியா் அலுவலகம் அருகே பெண் கல்வியின் அவசியத்தை உணா்த்தும் விதமாக அமைக்கப்பட்டுள்ள வெண்கலச் சிலையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை திறந்துவைத்தாா்.
கோவை மாநகரப் பகுதிகளில் பொலிவுறு நகரம் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் மாதிரி சாலை, குளக்கரையில் பொழுதுபோக்கு அம்சங்கள், 24 மணி நேரம் குடிநீா்த் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ரேஸ்கோா்ஸ் சுங்கம் ரவுண்டானா மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் அருகே வெண்கல குதிரை சிலை, உலக உருண்டை, காளை மாடுகள் சிலை, உலக உருண்டையைத் தாங்கும் மனிதன் சிலை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோல மக்கள் அதிகப்படியானோா் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானாவில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக புதிய வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தை தோளில் புத்தகப்பையை சுமந்தபடி உலக உருண்டையை நோக்கிச் செல்வதுபோல இந்த சிலை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட சிலையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை திறந்துவைத்தாா். மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா, கோவை மண்டல பாஸ்போா்ட் அலுவலா் சதீஷ், மாவட்ட வன அலுவலா் ஜெயராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.