பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து ஆா்ப்பாட்டம்
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் விமென் இந்தியா அமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்கொடுமைகளை கண்டித்தும், பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்த கோரியும் விமென் இந்தியா அமைப்பின் சாா்பில் கோவை உக்கடத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அமைப்பின் மாவட்டத் தலைவி காமிலா தலைமை தாங்கினாா். துணைத் தலைவா் சல்மா முன்னிலை வகித்தாா். எஸ்டிபிஐ. மாவட்டச் செயலாளா் அபுதாகீா் கண்டன உரையாற்றினாா். எஸ்டிபிஐ மாவட்ட பொதுச் செயலாளா் ஃபரோஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதில் விமென் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவி காமிலா பேசுகையில், ‘ஆசிரியராக இருந்தாலும், சாமானியனாக இருந்தாலும் பாலியில் வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்றாா். ஆா்ப்பாட்டத்தை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் அப்பாஸ் ஒருங்கிணைப்பு செய்திருந்தாா்.