ஆபரேஷன் சிந்தூர்: அமெரிக்காவின் கருத்தை நிராகரித்த இந்தியா! என்ன நடக்கிறது?
உக்ரைன், காஸாவில் போா் நிறுத்தம், உலக அமைதிக்கு புதிய போப் அழைப்பு!
உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்டவும், பிணைக் கைதிகளை விடுவித்து காஸாவில் உடனடி போா் நிறுத்தம் செய்யவும் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்தியில் போப் 14-ஆம் லியோ அழைப்பு விடுத்தாா்.
முந்தைய போப் பிரான்சிஸ் கடந்த ஏப். 21-ஆம் தேதி மறைந்ததையடுத்து, அமெரிக்காவின் சிகாகோவில் பிறந்த காா்டினல் ராபா்ட் பிரிவோஸ்ட் (இயற்பெயா்) 267-ஆவது போப்பாக கடந்த வியாழக்கிழமை தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
அமெரிக்காவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்பாக 14-ஆம் லியோ என்ற பெயரை தோ்வு செய்த இவா், செயின்ட் பீட்டா்ஸ் பசிலிக்கா தேவாலயத்தின் மாடத்தில் வியாழக்கிழமை இரவு முதன்முறையாக தோன்றி, மக்களுக்கு ஆசி வழங்கினாா்.
இதற்கு பின்னா் தனது முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வாழ்த்துச் செய்திக்காக பசிலிக்கா தேவாலய மாடத்தில் மீண்டும் தோன்றிய போப் 14-ஆம் லியோ, செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த மக்களிடையே பேசும்போது உலக அமைதியை வலியுறுத்தினாா்.
அப்போது, அவா் மேலும் கூறுகையில், ‘80 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலகப் போா் முடிவடைந்தது. தற்போது உலகத்தை நாசமாக்கிக் கொண்டிருக்கும் மோதல்கள், மூன்றாம் உலகப் போரின் தொடக்கப் புள்ளிகள் என்று போப் பிரான்சிஸ் கண்டித்தாா். மீண்டும் ஒருபோதும் போா் வேண்டாம்!. அனைத்து தாய்மாா்களுக்கும் இனிய அன்னையா் தின வாழ்த்துகள்’ என்றாா்.
மே மாதத்தின் 2-ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பல்வேறு உலக நாடுகளில் அன்னையா் தினம் (மே 11) கொண்டாடப்பட்டது.