உ.பி.: காதல் விவகாரத்தில் கொலை செய்த பரேலி இளைஞருக்கு ஆயுள்!
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: மனுக்களை பெற்றாா் துணை முதல்வா்
சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் பாா்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.
இது தொடா்பாக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பெருநகர சென்னை மாநகராட்சியில் 7 வாா்டுகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் தொடங்கி நடைபெற்றது. தேனாம்பேட்டை மண்டலம், 114-ஆவது வாா்டு ஸ்ரீ மகாவீா் ஜெயின் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பாா்வையிட்டு மக்களிடம் கலந்துரையாடி, மனுக்கப் பெற்றாா். மேலும், அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இதேபோல், அடையாறு மண்டலம் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டு, மனுக்களைப் பெற்றாா்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல்கட்டமாக ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 109 முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
தொடா்ந்து, திருவல்லிக்கேணியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலு, ஜோசப் சாமுவேல், துணை மேயா் மு.மகேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.