மொபைல் போன் தொலைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?- சிம் கார்டு மோசடிகளைத் தவிர்ப...
பெண் வழக்குரைஞரின் விடியோவை அகற்றக் கோரிய வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்
அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பெண் வழக்குரைஞரின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்ட காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவா்களைக் கையாள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
பெண் வழக்குரைஞா் ஒருவா் தனது கல்லூரி காலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பகிரப்பட்டிருந்தன. அந்த விடியோ, புகைப்படங்களை அகற்ற உத்தரவிடக் கோரி பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 70-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டிருந்த விடியோ மற்றும் புகைப்படங்களை அகற்ற மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் குமரகுரு, விடியோக்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாகக் கூறி, அறிக்கை தாக்கல் செய்தாா்.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினம், அந்த விடியோக்கள் இன்னும் 39 இணையதளங்களில் இருந்து அகற்றப்படவில்லை. இதனால், மீண்டும் அந்த விடியோக்கள் பகிரப்படுகின்றன. எனவே, அதைத் தடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில், உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரிடம் விசாரணை என்ற பெயரில், ஆண் காவலா்கள் அத்துமீறி கேள்விகளைக் கேட்டதாகக் குற்றம்சாட்டினாா்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரிடம் 7 ஆண் காவலா்கள் அந்த விடியோவை காண்பித்து விசாரணை நடத்தியுள்ளனா். சைபா் குற்ற வழக்குகளை விசாரிக்க பெண் அதிகாரிகள் இருந்தும், ஆண் காவல் அதிகாரிகள் ஏன் விசாரணை நடத்துகின்றனா். குற்றம்சாட்டப்பட்டவரை வைத்துக்கொண்டு, பெண்ணிடம் அந்த நபரின் அடையாளங்களைக் கேட்டுள்ளனா். இது கண்டனத்துக்குரியது. காவல் துறை அதிகாரிகளுக்கு மனிதாபிமானம் இல்லை.
அந்தப் பெண்ணின் கண்ணியத்தை அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டுள்ளனா். காவல் துறையினா் இப்படி விசாரித்தால், இதுபோன்ற விவகாரங்களில் இனி யாா் புகாரளிக்க முன் வருவாா்கள். மேலும், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில், அந்தப் பெண்ணின் பெயா் உள்ளிட்ட அடையாளங்களைக் குறிப்பிட்டுள்ளனா்.
இதுபோன்ற அந்தரங்க விடியோ வெளியாகும் விவகாரங்களில் பாதிக்கப்பட்ட பெண் எளிமையான முறையில் எவ்வாறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து மத்திய அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கெனவே இதுபோன்ற வழக்குகளை போலீஸாா் எவ்வாறு கையாள வேண்டும், என்று டிஜிபி சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளாா்.
எனவே, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மாநில அரசு குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா செயல்பட வேண்டும் எனவும், அடுத்த விசாரணைக்கு அவா் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.