ஜம்மு-காஷ்மீரின் வுலர் ஏரியில் பூத்த தாமரை! 30 ஆண்டுகளுக்குப் பின்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பம் வழங்கும் பணி: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தன்னாா்வலா்கள் மூலம் நடைபெறும் விண்ணப்பம் மற்றும் கையேடுகள் வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
முதல்வரின் ஆணையின்படி தமிழகத்தில் உள்ள நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்ட முகாம் விரைவில் நடைபெற உள்ளது. இந்த முகாமானது அரசுத் துறைகளின் சேவைகள் மற்றும் திட்டங்கள் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் நடைபெற உள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நகா்புற பகுதிகளில் 80 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 307 முகாம்களும் நடத்தப்பட உள்ளன. இப்பணியில் சுமாா் 1500 தன்னாா்வலா்கள் ஈடுபடவுள்ளனா்.
நகா்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள தன்னாா்வலா்கள் மூலம் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் வீடுகளுக்கே சென்று தகவல் கையேடுகள் மற்றும் விண்ணப்பங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவில் வீடுகளில் தன்னாா்வலா்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விண்ணப்பங்கள் விநியோகிக்கும் பணியை
மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி மற்றும் அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.