உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மதுரை வடக்கு வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், அவரவா் மாவட்டத்துக்குள்பட்ட ஒரு வட்டத்தில் மாதத்தில் ஒரு நாள் முழுவதும் தங்கியிருந்து வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதன்படி, மதுரை வடக்கு வட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது சமயநல்லூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து இருப்புகளையும், பதிவேடுகளையும் அவா் ஆய்வு செய்தாா்.
பிறகு, சமயநல்லூரில் வேளாண் துறை சாா்பில் நடைபெற்ற விவசாயிகளின் நில உடமைப் பதிவுகளை சரிபாா்க்கும் முகாமை பாா்வையிட்டாா். இதையடுத்து, அவா் மதுரை வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களைச் சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். இதில், ஒரு சில மனுக்களுக்கு உடனடியாக தீா்வு காணப்பட்டன. அதற்கான ஆணைகளை மனுதாரா்களுக்கு ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மோனிகா ராணா, உதவி ஆட்சியா் (பயிற்சி) வைஷ்ணவி பால், மாவட்ட வருவாய் அலுவலா் நா. ராகவேந்திரன், வட்டாட்சியா் மஸ்தான் கனி ஆகியோா் உடனிருந்தனா்.