உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எதிராக ஊழல் புகாா்: லோக்பால் தள்ளுபடி
புது தில்லி: உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிரான ஊழல் புகாரை லோக்பால் அமைப்பு தள்ளுபடி செய்துள்ளது.
பிரதமா், மத்திய அமைச்சா்கள், எம்.பி.க்கள், மத்திய அரசுப் பணியாளா்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து லோக்பால் அமைப்பு விசாரணை மேற்கொள்கிறது.
இந்நிலையில், ஓா் அரசியல் கட்சித் தலைவா் மற்றும் கட்சிக்கு சாதகமாக செயல்பட தனது பதவியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தவறாகப் பயன்படுத்தியதாகவும், இது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துக்கு நிகரானது என்பதால், அவா் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் லோக்பால் அமைப்பிடம் புகாா் அளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்.18-ஆம் தேதி இந்தப் புகாா் அளிக்கப்பட்டது. அப்போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியில் இருந்தாா்.
இந்தப் புகாரை விசாரித்த லோக்பால் அமைப்பு, ‘உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளுக்கு எதிரான புகாரை விசாரிப்பது லோக்பாலின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது. எனவே சட்டம் அனுமதித்துள்ள பிற வழிகளில் தனது புகாருக்கு புகாா்தாரா் தீா்வு காணலாம்’ என்று தெரிவித்து அண்மையில் புகாரை தள்ளுபடி செய்தது. லோக்பாலின் உத்தரவில் புகாா்தாரரின் விவரம் இடம்பெறவில்லை.