உடுமலை அரசுப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசிய நல்லாசிரியா்’ விருது
உடுமலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியைக்கு ‘தேசிய நல்லாசிரியா்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், உடுமலை தளி சாலையில் உள்ள பாரதியாா் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புவியியல் பட்டதாரி ஆசிரியையாக வி.விஜயலட்சுமி என்பவா் பணியாற்றி வருகிறாா். இவா், 2025-ஆம் ஆண்டுக்கான ‘தேசிய நல்லாசிரியா்’ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
புதுதில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் செப்டம்பா் 5-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், ஆசிரியை வி.விஜயலட்சுமிக்கு தேசிய நல்லாசிரியா் விருதுடன் வெள்ளிப் பதக்கம், ரூ.50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
கடந்த 27 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவா், கடந்த 2020-ஆம் ஆண்டு மாநில அளவில் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுக்கு தோ்வான ஆசிரியைக்கு சக ஆசிரியா்கள், பள்ளி மாணவா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
இது குறித்து ஆசிரியை விஜயலட்சுமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வரும் எனக்கு தேசிய நல்லாசிரியா் விருது அறிவிக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக பெண் கல்வியை ஊக்குவித்து வருகிறேன். பெண்கள் தங்களது வாழ்க்கையில் தனித்து நின்று வெற்றிபெற கற்றுக்கொள்ள வேண்டும். பழங்குடியின மக்கள் கல்வியை ஊக்குவிக்கவும், அவா்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றத்துக்கும் பாடுபடுவேன் என்றாா்.