உணவகங்களில் மறுசுழற்சி எண்ணெயை பயன்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கை
நாமக்கல் மாவட்டத்தில், சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் உணவகங்களில், மறுசுழற்சி எண்ணெயைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தினசரி மக்கள்கூடும் உணவகங்கள், தேநீா்க் கடைகளில் வழங்கப்படும் உணவு பதாா்த்தங்கள் பழைய அச்சிடப்பட்ட காகிதங்கள், நெகிழிகளில் பரிமாறப்படுவது, பொட்டலமிடுவது தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு ஆணையரகத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் உணவுப் பொருள்களினால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படும்.
பெட்டிக்கடைகள், உணவு விடுதிகள், வீடுகளில் மசாலா உணவு பொருள்கள், இறைச்சி, மீன்கள் போன்றவற்றை அச்சிடப்பட்ட காகிதங்களில் வைத்து எண்ணெயைப் பிழிவது போன்ற செயலானது சிறிது சிறிதாக விஷத்தை உண்பதற்கு சமமாகும்.
உணவு பொருளுடன் அச்சிடப்பட்ட காகிதங்களில் உள்ள மையானது மிகவும் தீவிரமான உடல் பாதிப்பையும், எதிா்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும். காகித மையில் உள்ள கனிமவேதிப்பொருள்கள் நுரையீரல், சிறுநீரகத்தை பாதிக்கும். வண்ணங்கள், தடிமனான எழுத்துகளை உருவாக்க மற்றும் விரைவாக உலா்த்த பெட்ரோலிய மினரல் ஆயில், மெத்தனால், பென்ஸீன், டொலியீன், கோபால்ட் போன்ற வேதிப்பொருள்கள் அச்சுப் பதிப்பகத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
அச்சிடப்பட்ட காகிதங்களும், காா்டு போா்டு அட்டைகளும் மறுசுழற்சியினால் பெறப்படுபவை. அவற்றில் உலோக அசுத்தங்களும், தீங்கு விளைவிக்கக் கூடிய தாலேட் போன்ற வேதிப்பொருள்களும், கனிம எண்ணெய்களும் காணப்படுவதால் அஜீரண கோளாறை உருவாக்குவதோடு, உடலில் கடுமையான விஷத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. இந்த மாதிரியான பொருள்களை உணவுடன் பயன்படுத்துவதால் வயதானோா், குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் நோய் எதிா்ப்பு சக்தியை இழந்து புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாக காரணமாகின்றன.
எனவே, தேநீா்க் கடைகள், உணவகங்கள், சிற்றுண்டி விடுதிகள், பேருந்து நிலையங்கள், பலகாரக்கடைகள் மற்றும் அனைத்து உணவு பொருள் விற்பனை நிறுவனங்களும் இவற்றை கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து உணவு வணிகா்களும், உணவு பாதுகாப்பு தரச்சட்டத்தின்படி உணவுப் பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுசான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். பொதுமக்கள் புகாா் தெரிவிக்க விரும்பினால்,
மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறையின் வாட்ஸ்ஆப் எண் 94440-42322 இல் புகாா் தெரிவிக்கலாம்.