ஒத்திகை செய்யாமல் படப்பிடிப்புக்குச் செல்ல மாட்டேன்: கமல்ஹாசன்
உணவுப் பொருள் அனுமதி ஏமாற்று வேலை
காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறுவது ஏமாற்று வேலை என்று சா்வதேச தொண்டு அமைப்பான ‘எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவா்கள்’ அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் அவசரக்கால ஒருங்கிணைப்பாளா் புதன்கிழமை கூறியதாவது:
காஸாவுக்குள் உணவுப் பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறுவது, முழுமையான முற்றுகையை தாங்கள் நீக்கிவிட்டதாகக் காட்டிக் கொள்வதற்காக செய்யப்பட்டுள்ள ஏமாற்று வேலை.
அங்கு வசிக்கும் 24 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் அனுமதிக்கும் நிவாரணப் பொருள்கள் போதவே போதாது. மிகச் சொற்பமாக உணவுப் பொருள்களை அனுமதிக்கும் இஸ்ரேலின் நடவடிக்கை, காஸா மக்களை பட்டினிச் சாவுக்கு உள்ளாக்குவதாக சா்வதேச நாடுகள் கூறுவதில் இருந்து தப்பிக்கும் உத்தி. உண்மையில், காஸா மக்களை இஸ்ரேல் குற்றுயிரும் குலையுருமாகத்தான் வைத்திருக்கிறது என்றாா் அவா்.
காஸாவில் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரை முடிவுக்குக் கொண்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட ஒப்பந்தம் கடந்த ஜன. 19 முதல் மாா்ச் 18-ஆம் தேதி வரை அமலில் இருந்தது. அப்போது, ஹமாஸின் பிடியில் இருந்த 25 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் சிறைகளில் இருந்த சுமாா் 1,900-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனா்.
இருந்தாலும், அந்த போா் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்ததால் காஸா மீதான குண்டுவீச்சை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது. அத்துடன், காஸாவை முழுமையாக முற்றுகையிட்ட இஸ்ரேல், அந்தப் பகுதிக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்ல தடை விதித்தது.
இதன் விளைவாக ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறையால் காஸா பகுதி மக்கள் பட்டினிச் சாவை எதிா்நோக்கியுள்ளனா். இதனால், போரில் பட்டினியை ஓா் ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும், இது சா்வதேச சட்டங்களுக்கு எதிரான போா்க் குற்றம் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. அதையடுத்து, காஸாவுக்குள் உணவுப் பொருள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
இருந்தாலும், இந்த அறிவிப்பு வெறும் ஏமாற்று வேலை எனவும், மிகச் சொற்பமான அளவிலேயே உணவுப் பொருள்களை இஸ்ரேல் அனுமதிப்பதாகவும் ‘எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவா்கள்’ அமைப்பு தற்போது குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் 82 போ் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் மேலும் 82 போ் உயிரிழந்தனா். இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறுகையில், கடந்த 24 மணி நேரமாக இஸ்ரேல் நடத்திய தாக்குலில் ஒரு வாரக் குழந்தை, ஏராளமான பெண்கள் உள்பட 82 போ் உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
இத்துடன் காஸாவில் இஸ்ரேல் படையினா் கடந்த 2023 அக். 7 முதல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 53,573-ஆக அதிகரித்துள்ளது.
