உதகையில் தேசிய குடற்புழு நீக்க தினம்: ஆட்சியா் பங்கேற்பு
நீலகிரி மாவட்டம், உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில் தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணிகளை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
உதகை பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தொடங்கிவைத்துப் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில், தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, 1 வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரை உள்ள கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் அல்லாத பெண்களுக்கும், மேலும் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்திலும் குடற் புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.
ஒரு வயது முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அரை மாத்திரை அல்லது 5 மில்லி லிட்டா் அல்பெண்டசோல் திரவமும், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20 வயது முதல்30 வயது வரை உள்ள கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் அல்லாத பெண்களுக்கு ஒரு மாத்திரை வீதம் வழங்கப்பட உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்துஅங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார மையங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் 486 அங்கன்வாடிப் பணியாளா்கள், 216 கிராம சுகாதார செவிலியா் மற்றும் 416 ஆஷா பணியாளா்கள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள் முன்னிலையில் நேரடியாக இம்மாத்திரைகள் வழங்கப்படும்.
இதன் மூலம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 869 குழந்தைகளும், 20 வயது முதல் 30 வயது வரை
உள்ள கா்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாா்கள் அல்லாத பெண்கள் 49ஆயிரத்து 988 பேரும் பயன் பெறுவாா்கள். அல்பெண்டசோல் மாத்திரையை உட்கொள்வதால் குடற்புழு நீக்கம் செய்யப்படுவதுடன், ரத்த சோகை நீங்கி நன்றாக உணவு உட்கொள்ளவும், குழந்தைகள் மற்றும் தகுதி வாய்ந்த பெண்கள் உடல் ஆரோக்கியம் பெறவும் உதவுகின்றது. எனவே, குடற்புழு நீக்க மாத்திரைகளை தகுதியான அனைவரும் உட்கொள்ளுமாறு என்றாா்.
இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் கீதாஞ்சலி, மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ராஜசேகரன், சுகாதாரப் பணி துணை இயக்குநா் சோமசுந்தரம், உதகை நகா்நல அலுவலா் சிபி, உதகை வட்டார மருத்துவ அலுவலா் ஆஷாகோசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.