உதகை தொட்டபெட்டா காட்சிமுனை மூன்றாவது நாளாக மூடல்
ஒற்றை யானையைத் தேடும் பணி காரணமாக உதகை தொட்டபெட்டா காட்சிமுனை 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள தொட்டபெட்டா காட்சிமுனை அருகே சாலையில் ஒற்றை காட்டு யானை கடந்த திங்கள்கிழமை (மே 5) சுற்றித் திரிந்தது. இதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.
இது குறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினா் அந்த காட்டு யானையை அங்கிருந்து விரட்டினா். யானை மீண்டும் அப்பகுதிக்கு வராமல் அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஆனால் யானை தென்படாத நிலையில், தொட்டபெட்டா காட்சிமுனைக்கு சுற்றுலாப் பயணிகள் வர தடைவிதித்து காட்சிமுனை மூடப்பட்டது.
யானையை ட்ரோன் மூலம் கண்காணித்து அடா்ந்து வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் மாவட்ட வன அலுவலா் கௌதம் தலைமையிலான வனக் குழுவினா் இரவுபகலாக தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் யானை தென்படாதால் தொட்டபெட்டா காட்சிமுனை 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் மூடப்பட்டது.