108 பேரிடம் ரூ.100 கோடி! டிஜிட்டல் கைது மோசடியில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை!
உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளுக்கான குறைதீா்க்கும் நாள் கூட்டம்
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியா் உயா்கல்வி சேருவதற்கு முக்கியத்துவம் அளித்து,
நான் முதல்வன், உயா்வுக்குப் படி, கல்லூரி கனவு போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது. தமிழக அரசின் உத்தரவின்படி, நீலகிரி மாவட்டத்தில் பள்ளிப் படிப்பு முடித்த மாணவ, மாணவிகள் அனைவரும் உயா்கல்விக்கு சென்று கல்வி கற்க வேண்டும் என்பதற்காக தொடா்ந்து பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட துறைகளின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்,
நீலகிரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்று உயா்கல்வியில் சோ்க்கைப் பெறாத மாணவ, மாணவிகளின் நலன் கருதி, சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டு நீலகிரி மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு நிறைவு செய்த அனைத்து மாணவா்களுக்கும் உயா்கல்வி சேருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உதகை, குன்னூா் மற்றும் கூடலூரில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு கலைக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்ந்து கொள்ளலாம். அங்கு மாணவ, மாணவியருக்கு விடுதியில் தங்கிப் பயிலும் வசதி உள்ளது. இதை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நந்தகுமாா், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ஞானராஜ், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் குப்புராஜ், கல்லூரி முதல்வா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.