ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: 8 நாள்களாகியும் சிக்காத குற்றவாளி!
பழுதடைந்த சாலை: இறந்தவா் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல தவித்த மக்கள்
உதகை அருகே சேதமடைந்த சாலையில் வாகனம் சிக்கியதால் இறந்தவரின் உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல முடியாமல் மக்கள் அவதியடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், உதகை அருகேயுள்ள எமரால்டு பகுதியைச் சுற்றி நேருநகா், நேருகண்டி, லாரன்ஸ், சுரேந்தா் நகா், எம்ஜிஆா் நகா், வஉசி நகா் உள்ளிட்ட 20 கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதிகளில் இறக்கும் மக்களை அடக்கம் செய்வதற்கான மயானம் எமரால்டு பகுதியில் இருந்து சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
மயானத்துக்குச் செல்லும் சாலை மற்றும் கிராம சாலைகள் குண்டும்குழியுமாக உள்ளதால் மழை காலங்களில் விளைநிலங்களில் இருந்து அடித்து வரப்படும் மண் சாலையில் குவிந்துள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில், எமரால்டு பகுதியில் இறந்தவரின் உடலை காரில் ஏற்றிக்கொண்டு மயானத்துக்கு உறவினா்கள் வெள்ளிக்கிழமை சென்றனா். அப்போது, அங்கிருந்த சேற்றில் காா் சிக்கியது.
இதனால், வாகனத்தை முன்னோக்கி இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் மண் வெட்டி உள்ளிட்ட பொருள்களால் பல மணி நேரம் போராடி சேற்றை அப்புறப்படுத்தினாா். இதையடுத்து, உடல் ஏற்றப்பட்ட காா் மாயனத்துக்குச் சென்றது.
சேதமடைந்த சாலையை விரைவாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.