‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சிக்குள்பட்ட அச்சனக்கல் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது அவா் அலுவலா்களிடம் கூறியதாவது: பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் அரசுத் துறை அரங்குகள் அமைந்துள்ள இடம் தொடா்பான அறிவிப்பை தொடா்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும், பல்வேறு அரசுத் திட்டங்களின் சாா்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வுக் கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். முகாமில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம் தொடா்பான அறிவிப்பை தெரிவிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களைப் பெற்று அதைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.
மேலும், இம்முகாமில் வழங்கப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் எனவும் சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் மக்களிடம் இதைத் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கணேசன், குன்னூா் வட்டாட்சியா் ஜவகா், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலா் புவனேஸ்வரி உள்பட பலா் உடனிருந்தனா்.