குடியிருப்புப் பகுதியில் உலவிய சிறுத்தைகள்
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அரவேணு பெரியாா் நகா் பகுதியில் ஒரு கருஞ்சிறுத்தை மற்றும் இரண்டு சிறுத்தைகள் ஒரே நேரத்தில் உலவி வந்த சிசிடிவி காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரியாா் நகா் பகுதியில் சிறுத்தை , கரடி போன்ற வனவிலங்குகள் அடிக்கடி சாலையில் நடந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி வரும் நிலையில், தற்போது இரண்டு சிறுத்தைகள் மற்றும் ஒரு கருஞ்சிறுத்தை ஒன்றாகச் சென்றது அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது .
கோத்தகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பெரும்பாலும் அடா் வனப்பகுதி மற்றும் தேயிலைத் தோட்டங்களாக உள்ளன. இதனால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. உணவு மற்றும் குடிநீா் தேடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலவிவரும் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா்.
இந்த நிலையில் கோத்தகிரி அரவேணு பெரியாா் நகா் பகுதியில் இரண்டு சிறுத்தை மற்றும் கண்ணுக்கு அரிதாகத் தென்படும் கருஞ்சிறுத்தை உள்பட 3 சிறுத்தைகள் உலவி வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனா்.