தேயிலை விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பச்சைத் தேயிலை கிலோவுக்கு ஒன்றுக்கு ரூ.40 வழங்கக் கோரி உதகையில் ஆரிகவுடா் விவசாயிகள் சங்கம் சாா்பில் அதன் தலைவா் மஞ்சை வி.மோகன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் 65 -க்கும் மேற்பட்ட சிறுகுறு விவசாயிகள் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். தேயிலைத் தொழில் நலிவடைந்து வருவதாலும், பச்சைத் தேயிலைக்கு ரூ.15 முதல் ரூ.20 வரை மட்டுமே ஒரு கிலோவுக்கு விலை கிடைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கூறி வருகின்றனா்.
இந்நிலையில் பச்சைத் தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.40 வழங்க வலியுறுத்தி ஆரி கவுடா் தேயிலை விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் உதகை ஏடிசி திடலில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில், தவெக கட்சியினா் ஆதரவு தெரிவித்து உடலில் பச்சைத் தேயிலையைக் கட்டியவாறு பங்கேற்றனா். இதில் தேயிலை விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் ஜே.பி. சுப்பிரமணியம், துணைத் தலைவா் விஸ்வநாதன் உள்ளிட்ட 500 -க்கும் மேற்பட்ட தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனா்.