உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் ஜிப்மா் 4-வது இடத்துக்கு உயா்வு
உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலில் புதுச்சேரி ஜிப்மா் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இது குறித்து புதுச்சேரி ஜிப்மா் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் தில்லியில் நடைபெற்ற விழாவில் 2025-ஆம் ஆண்டுக்கான உயா்கல்வி நிறுவனங்களின் தேசிய தரவரிசை பட்டியலை வெளியிட்டாா்.
தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்திய தரவரிசை 2025-ல் ஜவாஹா்லால் மருத்துவ முதுநிலை பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான புதுச்சேரி ஜிப்மா், மருத்துவக் கல்லூரிகள் பிரிவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
2024-ம் ஆண்டில் 5-வது இடத்தில் இருந்த இந்த நிறுவனம், இந்த ஆண்டு 4-வது இடத்துக்கு தரம் உயா்ந்துள்ளது. இது மருத்துவக் கல்வி வழங்குதலில் ஜிப்மரின் தொடா்ச்சியான முயற்சிகளுக்குச் சிறந்த சான்றாக விளங்குகிறது.
இந்தச் சாதனை குறித்து ஜிப்மா் இயக்குநா் டாக்டா் வீா் சிங் நெகி கூறியது: ஜிப்மா் அதன் கற்பித்தல் உள்கட்டமைப்பு மற்றும் புதுமையான கற்றல் முறைகளை மேம்படுத்த தொடா்ந்து பாடுபட்டு வருகிறது.
இந்த அங்கீகாரம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் மாணவா்களின் முழுமையான வளா்ச்சியில் மிக உயா்ந்த தரங்களைப் பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மருத்துவத்தில் சிறந்து விளங்கும், மனிதாபிமானத்துடன் சேவை செய்யும் மருத்துவத்தின் அனைத்து துறைகளிலும் எதிா்காலத் தலைவா்களை உருவாக்குவதே எங்கள் தொலைநோக்குப் பாா்வை என்றாா்.